மேற்படி ஒளிக்காட்சி மிகப் பயங்கரமானது. நோயாளிகள் அல்லது மனதளவில் தைரியம் இல்லாதவர்கள் இதனைப் பார்க்கவேண்டாம். இதில் ஒரு சிறுவன் தனது இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் வேதனையோடு கதறுவதும் அவனது அவல நிலையைப் பார்த்துச் சுற்றியிருப்பவர்கள் அழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வொளிக்காட்சியைப் பார்த்தவர்கள் மிகவும் அதிர்ந்துபோயிருப்பீர்கள். இந்தச் சிறுவனுக்கு எத்தனை வயதிருக்கும்? பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இந்த நிலைக்காளாகும்வகையில் அவன் செய்திருக்கக்கூடும்?
வழமைபோல் சிங்களம் இவனையும் பயங்கரவாதி என்றே கதைஅவிழ்க்கும் என்பது தெரியும். ஆனால், ஜனநாயகம், மனிதவுரிமை பற்றிப் பேசும் உலகம் என்ன சொல்கிறது? சிறுவர்நலன் பற்றி, சிறுவர் கல்வி பற்றி அலட்டும் யுனிசெவ் என்ன கருதுகிறது? ஆயுதப்போரில் சிறுவர் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகப் படையில் சேர்க்கப்படும் வயதெல்லையை வகுத்துள்ளதாகச் சொல்லும் ஐநா என்ன சொல்கிறது?
மேற்படி அவலம் குறிப்பிட்ட இந்தச் சிறுவனுக்கு மட்டுமே நடந்துவிடவில்லை. இதைவிட இன்னும் அதிகமாக வன்னியில் நடந்தது; நடந்துவருகிறது. ஒளிக்காட்சியாக வந்தவை சில. வராதவை மிகப்பல. இந்த வருடத்திற்குள் மட்டும் சிங்களப் பேரினவாத அரசின் இனப்படுகொலை நடவடிக்கைக்குள் நேரடியாகச் சிக்கி உயிரிழந்து, அவயவங்கள் சிதைந்து, உளவுரண் குலைந்து கிடக்கும் எந்தமிழ் மக்கள் தொகையில் கணிசமான பங்கினர் சிறார்கள் என்பது மிக வேதனைக்குரிய விடயம். (அதுவும் போரில் ஏற்படும் உடல், உளவுரண் பாதிப்புக்களைத் தாங்கமுடியாத, போரில் ஈடுபடுத்தக்கூடிய உடல், உளவுரண் எல்லைகளை அடைந்துவிடாத வயதையுடையவர்கள் என்று உலகமும் அதன் ஏவலமைப்புகளும் குறிப்பிடும் சிறார்கள்.)
வன்னியில் தமிழ்ச்சிறார்களின் நிலை இப்படியிருக்க, வன்னிப்பகுதியில் சிறுவர் கொல்லப்படுவது அதிகரித்திருப்பதாகக் கவலையையும் அங்கே சிறார்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக அனுதாபங்களையும் மாத்திரமே உலகும் யுனிசெவ் போன்ற உலக அமைப்புகளும் வெளியிட்டுவிட்டு, இதைத் தடுப்பதற்காக எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காதிருக்கின்றன. மேலும், தமிழர்தரப்பு மீது அடுக்கடுக்காகக் குற்றஞ்சுமத்திக் கட்டுப்பாடுகளையும் விதித்து, அவர்களை எல்லாவித்திலும் கட்டிப்போட்டுவிட்டுச் சிங்களத்திற்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கித் தமிழரை அழிக்கத்துணைபோகிறது உலகம்.
இந்நிலையில் வயதெல்லை பாராது கொன்று, காயப்படுத்தும் சிங்களமும் அதைக் கண்டும் காணாததுபோல இருக்கும் உலகுமே போரில் ஈடுபடக்கூடிய உடல், உளக் கட்டமைப்புகளை அடைந்துவிடாத தமிழ்ச்சிறுவர்களுக்கு அத்தகு தகுதியும் வலிமையையும் ஏற்படக் காரணமாக இருந்துவருகிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. எனவே போராடும் வயதெல்லையைத் தீர்மானிப்பதில் மிக முக்கிய காரணியாக இருப்பது எதிரியின் விரோத நடவடிக்கைகளும் போரை நிறுத்தக்கடப்பாடுடையவர்களின் பாராமுகமுமேயாகும்.
இந்தவகையில், நாளாந்தம் சிங்கள அரசு தொடுக்கும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தபடி. அத்தாக்குதல்களால் ஏற்படக்கூடிய குடும்ப உறவுகளின் இழப்புக்களை எதிர்நோக்கியபடி இருக்கும் அல்லது இழந்து தவிக்கும் ஒருவனோ ஒருத்தியோ எதிரிமீது ஆத்திரம் கொண்டு அவனைத் தாக்கத்துணிவதற்கு வயதும் ஒரு தடையா என்ன? எனவே அதற்கு வாய்ப்பாக விடுதலைப்படையில் இணைவதே அவர்களது ஒரே தேர்வாக இருக்கும். (இருக்கும் என்ன, அப்படியாகத்தான் இருந்தது; இருந்தும்வருகிறது). இதற்குக் காரணமான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து தீர்ப்பதை விட்டுவிட்டு, பின்னர் விடுதலைப்படையினரைக் குற்றஞ்சாட்டுவதில் எதுவித பயனுமில்லை. அத்தோடு அதற்கான அருகதையையும் உலகம் தமிழர் விடயத்தில் இழந்துவிட்டது என்று கூறுவதிலும் தவறில்லை.
No Responded To This Post
Leave A Reply