சரி பிழை பார்க்கும் நேரமல்ல இது!
-
இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரையோ அன்றி ஆய்வோ அல்ல. ஒரு தமிழ்மகனின் எண்ணப்பதிவு. நாளாந்தம் பலதும் பத்தும் கேட்டு மனதில் பட்டதை எழுத விரும்பும் தமிழனொருவனின் கருத்துப்பதிவு.
தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களைக் கேடயமாகப் பிடித்துவைத்திருப்பதாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டுமென்றும் பலதரப்பினரும் புலிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கவேண்டுமென்ற ஒரேநோக்கில் அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றனர்.பாவம் புலிகள். அவர்களும் என்னதான் செய்வார்கள். இல்லாதவொன்றைச் செய்யச்சொன்னால் அவர்களால் எப்படிமுடியும்?
மன்னார், மணலாறில் தொடங்கிய சிங்கள இனவெறி இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் போருக்குத் தப்பித்தப்பி இன்று புதுக்குடியிருப்புவரை வந்துவிட்ட இம்மக்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்றுவிட எத்தனையோ எத்தனையோ சந்தர்ப்பங்களிருந்தன என்பது தெரிந்திருந்தும் இப்படிப் பொய்யறிக்கைகள் விடுகிறார்கள் இந்தப் போலி ஜனநாயகவாதிகளும் அவர்களது வால்களும்.தற்போதுங்கூட இராணுவ ஆக்கிரமிப்புக்குட் செல்பவர்கள் முழுவிருப்பத்துடன் செல்லவில்லை.
தொடர்ச்சியான இனவெறித்தாக்குதல்களுக்கு மத்தியில், இனியும் இடம்பெயர்ந்துசென்று வாழ இடமில்லையென்ற நிலையில் ஒருபகுதியினரும், எதிர்பாராது இராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டதால் இன்னுமொரு பகுதியினரும்என இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஏனையோர் புலிகள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலும், எந்தநிலை வந்தாலும் இராணுவத்தின் பிடிக்குள் செல்லமாட்டோமென்ற ஓர்மத்துடனும் வாழ்கிறார்கள். இதுவே உண்மை.
அடுத்த விடயம், புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துகிறார்கள் என்பது. உண்மையில் அங்குள்ள அதிதீவிர நெருக்கடிநிலையில், மக்களே வயது வேறுபாடு பார்க்காது தாமாக முன்வந்து புலிகளுடனிணைந்து போரிடமுனைவதே நடக்கக்கூடியது. எனினும், வான்கரும்புலி கேணல் ரூபன் வன்னிவாழ் மக்களுக்கென எழுதிய தனது இறுதிமடலில் கூறியுள்ளதைப் பார்க்கும்போது, இந்த இக்கட்டானவேளையிலும் மக்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது குறைவாக உள்ளதாகவே தெரிகிறது.எனவே நான் கேட்கிறேன், ஆக்கிரமிப்புவெறியுடன் வன்னியைச் சூழ்ந்துநிற்கும் ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தை விரட்டவேண்டுமெனில், புலிகளும் தமது படைபலத்தைப் பெருக்கும்வகையில், தாமாக முன்வந்து விடுதலைப்படையில் இணையாத போராடும் வயதுள்ளவர்களைக் கட்டாயமாகச் சேர்ப்பதில் என்ன தவறிருக்கிறது? இந்தச் சூழ்நிலையில் கட்டாயம் அவர்கள் இதைச் செய்தேயாகவேண்டும்.
இதனோடு ஒட்டி நாம் இன்னும் சில விடயங்களையும் பார்க்கவேண்டும். அண்மையில் கோத்தாபய ராஜபக்ச பிடிபடும் தமிழிளையோர்கள் தொடர்பாக வெளியிட்ட இனவாத, மனிதவிரோதக் கருத்தின் முழு அர்த்தமும் எல்லோருக்கும் விளங்கியிருக்கும். அத்துடன் இராணுவ ஆக்கிரமிப்புக்குட் சென்றுள்ள இளையவர்களில் பலர் கொல்லப்பட்டோ காணாமற்போகடிக்கப்பட்டோவிட்டனர். எனவே, இப்படி அவர்கள் அநியாயச் சாவினையடைவதைவிடப் போராடித் தமது எதிர்காலச் சந்ததியினருக்குச் சுதந்திரநாட்டைப் பரிசளிக்க முனைவதே சாலச்சிறந்தது. இதனைச் சாவின் விளிம்பில் நின்றபடி அந்தத் துர்ப்பாக்கிய நிலைக்காளானவர்கள் எண்ணிப்பார்த்திருப்பர் என்பது நிச்சயம். எனினும் இதனை முன்பே உணர்ந்துகொள்ளவோ எதிர்காலமுணர்ந்து சிந்திக்கவோ விடாதபடி, பல விடயங்கள் அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கும். அதனாலேதான் சொல்கிறேன், புலிகள் போராடும் வயதுள்ளவர்களைக் கட்டாயமாக இணைப்பதில் எந்தத் தவறுமில்லையென்று. இதனைப் பல உலக அமைப்புகளும் நாடுகளும், ஏன் நம்மவர்களுங்கூட எதிர்க்கக்கூடும். ஏன் இப்போதும் கண்டித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இற்றைவரைக்கும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் மக்களை ஒன்றுசேரும்படி விரட்டிக்கொத்துக்கொத்தாகப் படுகொலைசெய்யும் சிறிலங்கா இனவெறியரசை எம்மவர் தவிர்ந்த எவராவது, எந்த நாடாவது அல்லது எந்த அமைப்பாவது அழுத்தமாகக் கண்டித்திருக்கிறதா? இல்லையே. மாறாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாகவே விலகித் தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்புப் போரைத் திணித்த ராஜபக்ச நிர்வாகத்துக்கு, ஆரம்பத்திலிருந்தே மறைமுக ஆதரவையும் நேரடி உதவிகளையுமே இவை வழங்கிவந்துள்ளன. அத்துடன் இப்போது தமிழர்களிடையே வாழும் அதிமேதாவிகள் சிலர் புலிகளின் போர்முறை குறித்துக் குற்றம்குறைகாணவும் தொடங்கிவிட்டனர். எனவே இத்தருணத்தில் பக்கச்சார்புடன் நடந்துகொள்ளும் உலகநாடுகளையும் அவற்றின் வால்பிடி அமைப்புகளையும், கண்டபடி குற்றஞ்சாட்டுபவர்களையும் கருத்திலெடுத்து விடுதலைப் போராட்டத்தில் தோல்வியடைவதைவிட, சாத்தியாயமான சகல வழிகளையும் பயன்படுத்தி வெற்றிபெறுவதே தற்போதுள்ள சிறந்த தெரிவாகும். பலவானையே உலகம் மதிக்கும் என்பதை நாம் பலமுறை நேரடியாகவே உணர்ந்து அனுபவித்துவிட்டோம்.
தமிழ்மக்களைப் பொறுத்தவரையில், நாடுசார்ந்து பொதுநலனடிப்படையில் சிந்தித்துச்செயற்படும் தன்மை மிக மந்தமாகவே இருக்கிறது. எனவே அவர்களை அந்தத்தடத்தில் வழிப்படுத்திச்செல்லவேண்டிய கடப்பாடு, விடுதலைப் போராட்டத்தை நடாத்தும் அமைப்பு என்ற ரீதியில் புலிகளுக்கு உண்டு. அதைத்தான் அவர்களும் செய்கிறார்கள். தமது சக்திக்கும் மீறிய பணியைப் புலிகளும் வன்னிவாழ் மக்களும் அங்கு செய்ய, புலம்பெயர்மக்களும் தமக்கான பணியை இங்கு தொடர, இரண்டும் ஒருகோட்டில் சந்திக்கும். அந்நாளே தமிழீழம் பிறக்கும் நாள். எனவே இத்தருணத்தில், இத்தகு நெருக்கடியான சூழலில் புலிகள் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் விமர்சனமின்றி முழுமனதுடன் ஆதரித்துச்செயற்படவேண்டியது எமது தலையாய கடமை மாத்திரமல்ல, அறிவிக்கப்படாத இடுபணியுங்கூட.