சர்வதிகாரிகளா புலிகள்???
----
எம்மினமே நாளாந்தம் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவ்வினைத்தைக் காப்பாற்றுவதற்கு கடமையும், பொறுப்பும் உள்ளவர்கள் ஏதாவது செய்வார்கள் என அம்மக்கள் நம்பி தமது இறுதி மூச்சை கையில் பிடித்தபடி பங்கர்களுக்குள் காத்திருக்கும்போது, அக்கடமையும், பொறுப்பும் உள்ள தலைவர்கள் தமது அப்பொறுப்பை தட்டிக்கழித்து வருகின்றனர். அதற்காய் அவர்கள் பல காரணங்களை அடுக்கிக்கொண்டு போகிறார்கள். அதில் ஓர் காரணம்தான் புலிகள் சர்வதிகாரிகளாம்! (ஆகவே புலிகளை நம்பிய மக்களும் சாகத்தான் வேண்டும் என்ற கணக்கில் அல்லவா கதை சொல்லுகிறார்கள்.)
முதலில் புலிகள் சர்வதிகாரம்தான் பண்ணுவர்கள் என்ற கூற்றுக்கு அவர்கள் சொல்லும் முதல் எடுத்துக்காட்டு என்னவென்று பார்ப்போம், 80-களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கியிருந்த பேட்டி ஒன்றில், எப்படியான ஆட்சிமுறை தமிழீழத்தில் அமையும் என்ற கேள்விக்கு, அப்போதிருந்த யூக்கோஸ்சுலோவியா நாட்டினை உதாரணமாக் கூறியிருந்தார். இதில் உள்ள பிரச்சினையாக அவர்கள் கூறுவது என்னவெனில், அப்போதிருந்த யூக்கோஸ்சுலோவியாவில் ஒரு கட்சி ஆட்சி முறைதான் காணப்பட்டது, ஆகவே புலிகளின் தலைமை சர்வதிகாரத்தையே விரும்புகிறது என்று ஓப்பாரி வைக்கின்றார்கள். ஆனால் இவர்கள் அன்றைய உலக ஒழுங்கை தமது வசதிக்காக மறந்துபோய்விட்டார்கள் என்றே கூறவேண்டும். ஏன்னெனில் அன்றைய உலகம் முதலாளித்துவம் என்றும் கம்யூனிசம் என்றும் இரு பகுதிகளாக இருந்தபொழுது, முதலாளித்துவமும் இன்றி கம்யூனிசமும் இன்றி இரண்டுக்கும் இடைப்பட்ட முறையில் ஓர் ஆட்சி முறையை கொண்டமைந்த ஓர் நாடாகவே அன்றைய யூக்கோஸ்சுலோவியா இருந்தது. த.வி.பு தலைவர் முதலாளித்துவமும் இன்றி கம்யூனிசமும் இன்றிய ஓர் ஆட்சி முறை அமையும் என்று சொல்ல. இவர்கள் என்னவென்றால் ஓரு கட்சி, சர்வதிகாரம் என்று தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தூக்கிவைத்துள்ளார்கள். சரி த.வி.பு தலைவர் சர்வதிகார ஆட்சியைத்தான் கூறினார் என்றால், அப்போது இராணுவ ஆட்சிகள் நடந்த ஓர் நாட்டை ஏன் அவர் உதாரணம்; காட்டவில்லை???
அடுத்ததாக புலிகள் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு என்னவென்றால், மற்றைய இயக்கங்களையும், தலைவர்களையும் புலிகள்கள் அழித்தார்களாம். ஆகவே புலிகளிடம் பன்முகத்தன்மை இல்லையாம் அவர்கள் மற்றவர்களை அனுசரித்துப்போகமாட்டார்களாம். முதலில் அவர்களுக்கு ஓன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம், புலிகள் மற்றைய இயக்கங்களுடனும், தலைவர்களுடனும் சேர்ந்து பணியாற்றிய காலம் இருந்ததே. ஆனால் நடந்தது என்ன?
அன்றைய காலத்தின் தேவை,பல தலைமைத்துவம் என்ற நடைமுறையிலிருந்து ஒரு தலைமைத்துவம் என்ற தேவையை எமக்கு மிகத் தெளிவாக உணர்த்தி நின்றது. ஏனெனில் எம்மிடைய பல இயக்கங்கள் அன்று இருந்தமையாலும், அவற்றில் பல நடைமுறைகள், மற்றும் கொள்கைகள் ரீதியாக தெளிவிவு மற்றும் உறிதியற்றுக் காணப்பட்டமையினால், அகிம்சைப் போராட்டத்திலிருந்து ஆயுதப் போராட்டமாக உறுதியாகப் பயணிக்க ஆரம்பித்த வரலாற்றுக்கட்டத்தில் அப்போராட்டத்தக்கான எமது தலைமைத்துவத்திற்து மிகவும் குழப்பமான நிலையே காணப்பட்டது. இந்த நிலையில் எமக்கான தலைமைத்துவத்தை வழங்க இந்தியா முனைந்தது வரலாற்றுக் கண்கூடு.
இந்த இடத்தில்தான் வரலாறு தன்போக்கில் ஈழத்தமிழர்களிடம் அன்றைய தேவையைக் கேட்டுநின்றது. எவ்வாறு தமிழர்களின் உரிமைப் போராட்டம் உண்ணாவிரதங்களில் இருந்து ஆயுதப்போராட்டமாக மாறியது வரலாற்றுத் தேவையாக இருந்ததோ அவ்வாறே சுகந்திர தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஓர் உறுதியான தலைமைத்தவத்தைக் கேட்டு நின்றது. அத் தலைமைத்துவத்தக்கான தேவையை நிரப்பியவர்கள்தான் விடுதலைப் புலிகள்.
இங்க இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டும், அது என்னவெனில் ஏதோ புலிகள் எல்லோரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களாகவே தலைமைத்துவத்தை எடுத்துக் கொண்டதாக சிலர் எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள், அவர்கள் ஏனோ மற்றய இயக்கங்களும் புலிகள் மீது ஆயுதத்தைப் பிரயோகித்ததை மூடி மறைக்கவே முயலுகின்றார்கள்.
இதைவிட வேடிக்கையான விடயம் என்னவேனில், தம்மை "மாற்றுக் கருத்து மாணிக்கங்களாக" எழுதித் கொள்ளும் சிலர் புலிகள் மற்றய இயக்கங்களின் ஆயுதம் தரிக்காத அரசியல் உறுப்பினர்களை கொலை செய்து வந்ததாகப் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இவர்களுக்கு ஆயுதப் போராட்டத்தைவிட்டுவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்து விட்டதாகப் பிதற்றிக் கொள்ளும் டக்லஸ் தேவனந்தாவின் கட்சி எவ்வாறு யாழ் குடாநாட்டில் தமக்கான ஆயுத முகாங்களை நிறுவி படையினருடன் நெருங்கிச் செயற்பட்டுவருகின்றனர் என்று முன்னாள் யாழ் குடாவிற்கான இராணுவத் தளபதி வழங்கியிருந்த செவ்வியை ஏனோ படிக்காமல் விட்டுவிட்டார்கள். ( மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கு இவை எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப்போகுது???)