இனம், மொழி, கலை-பண்பாடு போன்ற இன்னபிற அம்சங்களுடன் மட்டுமே தமிழீழமும் தமிழ்நாடும் தொடர்புகளைக் கொண்டவையல்ல, மேலுமொரு எதிர்மறை விடயத்திலும் அதாவது, தமிழீழப் போராட்டத்தின் தோல்வியென்பது தமிழகத்தின் தனித்துவ இருப்பையே தொலைத்துவிடும் என்றவிதத்திலான தொடர்பையும் அவை தம்மிடையே கொண்டுள்ளன.
தமிழகத்தின் தனித்துவ இருப்பென்பது, அதன் அடிப்படைக் கூறுகளான இனம், மொழி, கலை-பண்பாடு என்பவற்றைத் தக்கவைத்துக்கொள்வதிலேயே தங்கியுள்ளது என்பது வெளிப்படை.இந்தவகையில், திராவிடத்தின் பாரம்பரிய அம்சங்களை இந்தியப் பெருந்தேசியவாதத்திற்குள் மூழ்கிச் சீர்குலைந்துவிடாமற் பேணவும் அழிந்துவரும் அதன் தனிச்சிறப்பியல்புகளைச் மீள்செயலாக்கம் செய்யவும் கட்சிசார் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சியைப் பிடிப்பதே சிறந்த மூலோபாயம் எனக் கருதித்தான் அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவை நிறுவி தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.
ஆனால் காலத்தின் கணிப்போ வேறுவிதமாக அமைந்து, அண்ணாவைப் பலியெடுத்ததோடல்லாமல் அவரது கொள்கைகளையும் திட்டங்களையும் பலியெடுத்தது. அண்ணாவின் மறைவின் பின்வந்த தலைவர்களின் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் தமிழும் தமிழினமும் மெல்லச் செத்துக்கொண்டிருப்பதை நாம் கண்கொண்டு பார்த்துவருகிறோம். இதன் உச்சமாகத் தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியினால் தமிழினத்தின் பேரழிவுக்கான முழுமுயற்சியும் எடுக்கப்பட்டுவிட்டது.
இது எந்தவகையிலென்றால், எந்தக் கட்சியின் ஆட்சியின் மூலம் தமிழ்நாடு தன் சிறப்பியல்புகளை இழந்து இந்தியப்பெருந்தேசியவாதத்திற்குள் அமிழ்ந்துவிடும் என்று கருதப்பட்டதோ, அதே காங்கிரஸ் கட்சியின் முந்தானையில் தனது மஞ்சள் துண்டை முடிந்துவிட்டு, அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபட்டுத்திரிகிறார் அண்ணாவின் இலட்சியக் கட்சியான திமுகவின் தற்போதைய தலைவர் கருணாநிதி அவர்கள். அண்ணாவின் காலத்தில் தனக்காகவும் தனது காலத்தில் தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே சிந்தித்துச் செயற்பட்டுத் தமிழினத்தின் பாரம்பரியங்களை அடகுவைத்துள்ள கருணாநிதி தனது அண்மைய தமிழின விரோத நடவடிக்கையாகத் தமிழீழ மக்களின் இனவழிப்பு நடவடிக்கையில் இந்தியக் காங்கிரஸ் மற்றும் சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து நடக்கத்துணிந்துவிட்டார்.
யார் என்ன சொன்னாலும், தமிழீழப் பேரெழுச்சியின் விளைவாகத் தமிழ்நாட்டிலிருந்த தமிழினவுணர்வுத் தளம் மேலும் தீவிரமடைந்தது என்றோ அல்லது அதன் வீரியம் குறைந்துவிடாதபடி பாதுகாக்கப்பட்டதென்றோ சொன்னால் அது மிகையில்லை. பெரும்பாலான தமிழக மக்கள் தம்மை இந்தியப் பெருந்தேசியத்தின் அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சூழலுக்குள் தொலைத்துவிடக்கூடிய சூழ்நிலை நிலவும்வேளையில் அதிகாரம் கையிலுள்ள தலைவர்களும் அரசியலுக்காகத் தம்மினத்தையே விற்கத்துணிந்துவிட்டமை ஒரு பாரம்பரிய இனமாகப் பெருமை பேசும் நம்மினத்தின் சாபக்கேடேயன்றி வேறல்ல. இந்தநிலையில் தமிழீழப் போராட்டமும் தோற்கடிப்படுமானால் அது தமிழகம் தன்னை இந்தியத்துக்குள் தொலைத்துவிடக்கூடிய சாத்தியத்தை இன்னும் வீச்சாக்கும். அதனாலேதான் சொல்கிறேன், தமிழீழத்தின் வீழ்ச்சியென்பது தமிழகத்தின் வீழ்ச்சிக்கும் வழிகோலுமென்று.இதனைப் புரிந்துகொண்டால் தமிழினவுணர்வோடு சிந்திக்கும் தமிழகமக்களும் திராவிடவழிக் கொள்கைகளையே தமது மூச்சாகக் கொண்ட தலைவர்களும் இப்போதும்சரி, எதிர்வரும் தேர்தலின்போதும்சரி தம்மைச் சரியான திசையில் வழிப்படுத்திக்கொள்வர்.
இறுதியாக இக்கட்டுரையில் கருணாநிதி அவர்களைக் கலைஞர் என்று ஓரிடத்திலும் விளிக்கவில்லையே என்று ஆதங்கப்படுவோருக்காக ஒருசில விடயங்களைக் கூறவிரும்புகிறேன்.
திமுக தலைவர் கருணாநிதியின் தற்போதைய தமிழினவிரோதச் செயற்பாடுகளால் மனம்புழுங்கிப் புலம்புவோர்கூடச் சொல்லும் ஒரு விடயம், கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகளுக்கப்பால் அவரது தமிழ்ப்புலமையை மெச்சுகிறோமென்று. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், தமிழினத்தை அழித்துவிட்டு தமிழில் ஆக்கங்களை ஆக்குவதில் எதுவித பயனுமில்லை. இவர் தனது மொழியாளுமையால் மக்களைக் கட்டிப்போட்டுத் தனது சுயதேவைகளை நிறைவேற்றிக்கொண்டாரே தவிர அம்மக்களின் நலன்களில் எதுவித அக்கறையையும் காட்டவில்லை என்றே நான் கருதுகிறேன். அதனாலேதான் இவரைக் கலைஞர் என்று விளிப்பதைத் தவிர்த்துக்கொண்டேன்.
2 Responded To This Post
நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை.
இப்போதைக்கு தமிழகத்தில் முதன்மை தமிழின விரோதியாக இருப்பவர் கருணாநிதி மட்டுமே, ஏனென்றால் அவருக்கு தேவை தன்னுடைய அரசியலும் தன்னுடைய குடும்பமும் குடும்ப அரசியலும் மட்டும் தான், தன்னுடைய அரசியல் தேவைகளுக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார், கருணாநிதியால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் கிடைத்து விடப்போவது இல்லை... ஏனென்றால் அவர் தமிழக தமிழர்களுக்கே எதுவும் செய்யப் போவதில்லை,...
Leave A Reply