விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை மன்னிக்கக் கோருகின்றார் டக்ளஸ்
விடுதலைப் புலிகள் தலைமை தண்டிக்கப்பட வேண்டியதே. அது இன்று தண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அப்பாவிப் பெற்றோர்களது பிள்ளைகள். ஆகவே, அவர்கள் மன்னிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாள ரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் வைத்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர் கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு...
1971 மற்றும் 1989 கால கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதுபோல் மேற்படி புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், தற்போது தற்காலிக நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் 6 மாத காலத்திற்குள் மீள் குடியேற்றப்பட வேண்டும்.இடம்பெயர்ந்த நிலையில், வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு வர்த்தகப் பெருமக்களுடன் இணைந்து வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலமும், மகேஸ்வரி நிதியதின் மூலமும், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், சமய மற்றும் பொது அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் மூலமும் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இம்மக்கள் மத்தியில் கையளிக்கப்படவுள்ளன.
யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தற்போது கட்சிக்குள் ஆராயப்பட்டு வருகிறது. இதற்கு முன் எமக்கான நிலைமைகளை நாம் சரிவரப் பயன்படுத்தாமையினால் எமது மக்கள் இன்று இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, இந்த நிலையில் பல கோணங்களில் நன்றாக ஆராய்ந்து பார்த்தே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
அத்துடன், இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன் வன்முறை சார்ந்த வழி என்றும் ஜனநாயக வழி என்றும் இரு வழிமுறைகள் வந்தன. ஆனால், இப்போது வன்முறை வழி அழிந்து ஜனநாயக வழிமுறை மட்டுமே மக்கள் முன் இருக்கிறது என்றார்.
No Responded To This Post
Leave A Reply